பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையானது ஏழு கிராமங்களை உள்ளடக்கிய வைத்தியசாலையாக காணப்படுகிறது. 1992ஆம் ஆண்டுக்கு முன்னர் 4 வைத்தியர்கள் கடமையாற்றிய வைத்தியசாலை யுத்த சூழலால் முற்றாக பாதிக்கப்பட்டு பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
எனினும் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. குறிப்பாக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் இப் பகுதி மக்கள் தமக்கான போதிய வைத்திய சேவையை பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
இங்கு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களே அதிகம் காணப்படுவதனால் இவ் வைத்தியசாலையின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆளணி பற்றாக்குறை மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும். மேலும் பஸ் தரிப்பிட நிலையமும் அமைத்து தரப்பட வேண்டும். பிரதான வீதி அகலமாக்கப்படுவதன் மூலம் தனியார் சிற்றூர்தி சேவை வைத்தியசாலைவரையும் சென்று வரமுடியும் என சிற்றூர்தி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் வைத்தியசாலையின் சுற்றுமதிலை அமைப்பதற்கான பணிகள் வடமாகாண சபையின் உறுப்பினர்களின் நிதியுதவி மற்றும் பொதுமக்கள், புலம்பெயர்ந்தவர்களின் நிதி உதவியுடன் நடைபெற்று வருகின்றன.
எனவே வைத்தியசாலையின் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன் தரத்தினையும் உயர்த்துமாறு வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலவச முச்சக்கர வண்டி சேவையினை வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆரம்பித்து வைத்த போது மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.


































