பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க பொருளாளர் திரு வி. குகனேஸ்வரன், மற்றும் நிர்வாக உறுப்பினர்களான திரு மு. ஞானசீலன், திரு த. நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் 09.05.2023 செவ்வாய்கிழமை அன்று யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு பாடசாலைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இருமாடிக் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டதுடன், பாடசாலை முதல்வருடன் இணைந்த வகையில் பாடசாலைச் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலில் முதல்வராலும், பாடசாலைச் சமூகப் பிரதிநிதிகளாலும் கடந்தகாலங்களில் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தால் பாடசாலைக்கு செய்யப்பட்ட உதவிகளை முன்வைத்து விசேடநன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் தற்போதைய நிலவரத்திற்கமைவான தேவைகளும் தெளிவுபடுத்தப்பட்டன. தொடர்ந்து பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கப் பிரதிநிதிகளால் தமது கடந்தகால வேலைத்திட்டங்கள் விடயமாகவும் நிதி வழங்கல் நடைமுறை ஒழுங்குகள் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டதுடன், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கமானது மாதகல் மண்ணின் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு மற்றும் முன்பள்ளிகளினதும், பாடசாலைகளினதும் அபிவிருத்தியில் தொடர்ந்தும் அக்கறை கொண்டு எம்மாலான நிதிப்பங்களிப்பை வழங்குவோமெனவும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் மாதகல் கிராமத்தினதும், மக்களினதும் முன்னேற்றத்திற்கு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் தொடர்ந்தும் நிதியுதவி செய்துவரும் என உறுதியளித்தனர்.
தொடர்ந்து பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்க அனைத்து உறுப்பினர்களாலான உதவிகளும் என்றும் காலத்தால் நினைவிற் கொள்ளப்பட வேண்டுமென பாடசாலை முதல்வராலும், பாடசாலைச் சமூகப் பிரதிநிதிகளாலும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


